துப்புரவுத் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்குக – கருணாநிதி

384 0

karunanidhi_2930485fஉயர் நீதிமன்ற உத்தரவுப்படி விஷவாயு தாக்கி உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘மாற்றத்துக்கான இந்தியா’ அமைப்பின் இயக்குநர் நாராயணன் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் கழிவு நீர்த் தொட்டிகள், குழாய்களுக்குள் இறங்கி அடைப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் சுமார் 200 பேர் விஷவாயு தாக்கி இறந்துள்ளனர்.

அவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விஷவாயு தாக்கி உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

அது விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், உள்ளாட்சித் தேர்தல் வருவதால் இறந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க கால அவகாசம் வேண்டும் என தமிழக அரசு கோருவதை ஏற்க முடியாது.

விஷவாயு தாக்கி இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களை கண்டுபிடித்து இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி இந்த வழக்கை வரும் அக்டோபர் 7ஆம் திகதிக்கு தள்ளிவைத்தனர்.

திமுக ஆட்சியில் துப்புரவுத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக சுய வேலைவாய்ப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தநிலையில், நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்து காலத்தை கடத்தாமல் இறந்த துப்புரவுத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்று கருணாநிதி கோரியுள்ளார்.