லெபனான் நாட்டுக்கு எதிராக சவுதி அரேபியா போரை அறிவித்திருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
லெபனான் பிரதமர் சாத் ஹரிரி, சமீபத்தில் சவுதி அரேபியா சென்று அங்கிருந்தபடியே தான் பதவி விலகுவதாக தெரிவித்தார். ரியாத்தில் இருந்து ஒளிபரப்பான தொலைக்காட்சி ஒன்றில் தோன்றி பேசிய அவர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறினார்.
ஆனால் சவுதி அரசு கட்டாயப்படுத்தியதால்தான் ஹரிரி பதவி விலகியதாக, லெபனானின் பலம் வாய்ந்த ஹிஸ்புல்லா ஷியா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா குற்றம்சாட்டினார். மேலும், அவர் நாடு திரும்பினால் தான் உண்மை தெரியவரும் என்றும், அதுவரை மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
பிரதமர் ஹரிரி பதவி விலகலை அதிபர் மைக்கேல் அவுன் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் நாடு திரும்ப வேண்டும் என்று அதிபரும் மூத்த அரசியல் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால், ஹரிரி இதுவரை எதுவும் பேசாமல் மவுனமாக உள்ளார்.
பிரதமர் சாத் ஹரிரி செளதி பதவி விலகலை அறிவித்து சில நாட்கள் கடந்த நிலையில், சவுதி அரேபியா மீது மீண்டும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் ஹசன் நஸ்ரல்லா.
லெபனான் நாட்டுக்கு எதிராக சவுதி அரசு போரை அறிவித்துள்ளதாக கூறும் நஸ்ரல்லா, சாத் ஹரிரியின் விருப்பத்திற்கு மாறாக சவுதி அரசு அவரை பிடித்து வைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
‘லெபனானுக்கு எதிராக இஸ்ரேலை செளதி தூண்டுகிறது. இது மிகவும் ஆபத்தான விஷயம். லெபனானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையில் ஈடுபட, இஸ்ரேலுக்கு பில்லியன் கணக்கிலான பணத்தை கொடுக்க சவுதி தயாராகி வருகிறது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லெபனானின் பலம் வாய்ந்த ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.