ஆஸ்திரேலியாவில் இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் சிக்கிய மற்றொரு எம்.பி. ராஜினாமா செய்ததால், அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் அரசியலமைப்பு சட்டப்படி, இரட்டை குடியுரிமை வைத்துள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாது. தற்போது இந்த சட்டத்தை மீறி இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பதாக பல்வேறு அரசியல் தலைவர்கள் சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் தங்களுடைய குடியுரிமை குறித்த தகவலை பொதுவெளியில் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், சட்டத்தை மீறி இரட்டை குடியுரிமை வைத்திருந்த குற்றத்திற்காக சிலர் பதவியை இழந்துள்ளனர்.
அந்நாட்டு உயர்நீதிமன்ற உத்தரவின்படி துணை பிரதமர் பர்னபி ஜாய்ஸ் உள்ளிட்ட 3 எம்.பி.க்கள் அக்டோபர் மாதம் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் 2 பேர் ராஜினாமா செய்தனர். இதனால், பிரதமர் மால்கம் டர்ன்புல்லின் அரசாங்கத்திற்கு பின்னடைவு ஏற்பட்டது. மெஜாரிட்டியைவிட ஒரே ஒரு இடம் மட்டுமே அதிகம் இருந்தது. ஜாய்ஸ் தனது நியூசிலாந்து குடியுரிமையை ஏற்கனவே திருப்பி அளித்துவிட்டதால், அவரால் இடைத் தேர்தலில் ஜாய்ஸ் மீண்டும் போட்டியிட முடியும்.
இந்நிலையில், இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் சிக்கிய மற்றொரு எம்.பி.யான ஜான் அலெக்சாண்டர் இன்று தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் ஆளும் கூட்டணிக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது சரியாக மெஜாரிட்டி உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ள நிலையில், யாராவது ஒரு எம்.பி. பதவி விலகினாலும் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும். ஆனால், 2 சுயேட்சை உறுப்பினர்கள் தங்கள் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளார் பிரதமர்.
தற்போது ராஜினாமா செய்துள்ள அலெக்சாண்டர், தனக்கு பிரிட்டன் குடியுரிமை நீடிக்கிறதா, இல்லையா? என்பது குறித்து பிரிட்டன் உள்துறை அலுவலகத்தின் பதிலுக்காக காத்திருப்பதாக கூறுகிறார். பிரிட்டன் உள்துறை பதில் அளித்துள்ளதா? என்பது தெரியவில்லை. அதேசமயம், அவர் இடைத்தேர்தலில் போட்டியிடுபதற்கு முன்பு ஆஸ்திரேலிய குடியுரிமை மட்டுமே வைத்திருப்பதை உறுதி செய்யவேண்டும்.