சசிகலா உறவினர்கள் தொடங்கிய 60 போலி நிறுவனங்கள் கண்டுபிடிப்பு

280 0

வருமான வரி அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, சசிகலா உறவினர்கள் 60 போலி நிறுவனங்களை தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

சசிகலா, அவரது கணவர் நடராஜன், சகோதரர் திவாகரன், டி.டி.வி.தினகரன் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரி அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

தமிழ்நாட்டில் சென்னை, தஞ்சை, மன்னார்குடி, திருச்சி, நாமக்கல், கோவை, கோடநாடு உள்ளிட்ட இடங்களிலும், கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திலும், புதுச்சேரியிலும் மற்றும் டெல்லியிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. மேற்கண்ட ஊர்களில் உள்ள 187 இடங்களில் 1,600-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் நடைபெற்ற இந்த சோதனையின் போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

நேற்று 2-வது நாளாக இந்த சோதனை நீடித்தது. நேற்று முன்தினம் 40 இடங்களில் சோதனை முடிந்த நிலையில், நேற்று 147 இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது.

டி.டி.வி.தினகரனின் சகோதரர் பாஸ்கரனின் பங்களா சென்னை நீலாங்கரையில் உள்ளது. இந்த பங்களாவில் நேற்று 2-வது நாளாக நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 7 கிலோ தங்க நகைகளும், முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பல்வேறு இடங்களில் வருமான வரி அதிகாரிகள் நடத்திய சோதனையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் சசிகலாவின் உறவினர்கள் கருப்பு பணத்தை மாற்றுவதற்காக சுமார் 60 போலி நிறுவனங்களை தொடங்கியது கண்டறியப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சோதனை முழுவதுமாக முடிந்த பின்னர்தான் முழு தகவல்களும் தெரியவரும் என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a comment