வருமான வரி சோதனை அரசியல் உள்நோக்கம் உடையது: ஜி.ராமகிருஷ்ணன்

308 0

சசிகலா, டி.டி.வி.தினகரன் உறவினர்களிடம் நடைபெறும் வருமான வரி சோதனை அரசியல் உள்நோக்கம் உடையது என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் குடும்பத்தினரின் வசிப்பிடங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த வருமான வரிச்சோதனைகளின் நோக்கம் நிச்சயமாக நேர்மையான நோக்கத்திற்கு அப்பாற்பட்டது என்று சொல்ல முடியும்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது 3 கண்டெய்னர்களில் பிடிக்கப்பட்ட பணம் பல நாட்கள் யாருடையது என்று தெரியாமல், திடீரென்று ஒருநாள் நீதிமன்றத்தில் ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ அது எங்கள் பணம் என்று சொன்னதும், அன்புநாதன் வீட்டில் பணம் எண்ணும் “எந்திரங்கள் இருந்ததும், கோடிக்கணக்கில் பணங்கள் பிடிபட்டதும்” தமிழக மக்களின் நினைவில் இருந்து நீங்கிவிடவில்லை.

சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனைகள் நடத்தப்பட்டு, பழைய, புதிய ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக எடுக்கப்பட்டன, வெள்ளி மற்றும் தங்க கட்டிகள் எடுக்கப்பட்டன, இப்போது சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணங்கள் எந்த வங்கிக்கு அனுப்பப்பட்டது என்று தெரியாது என ரிசர்வ் வங்கி சொல்லியிருப்பதாக மத்திய புலனாய்வுத்துறை நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது.

சேகர் ரெட்டியின் டைரியில் உள்ள விவரங்களின் அடிப்படையில் வருமானவரி சோதனைகள் நடத்தப்படவில்லை என்பதும், ராமமோகன் ராவ் அலுவலகத்திலும், வீட்டிலும் சோதனைகள் நடந்ததும், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சொன்னதும் அதன் பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் இருப்பதும், விஜயபாஸ்கர் வீடு மற்றும் குவாரிகளில் அதிரடி சோதனைகள் நடத்தி ரூ.89 கோடி பணம் ஆர்.கே. நகரில் விநியோகித்ததாக சொல்லப்பட்டதும், விஜயபாஸ்கர் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் அவர் நீடித்து கொண்டிருப்பதும், அவரோடு தொடர்புடைய அமைச்சர்கள் யார் மீதும் நடவடிக்கை இல்லாமல் இருப்பதும், அவர்கள் வீடுகளில் சோதனை நடத்தாததும், வருமான வரித்துறையினர் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழப்பதற்கு இட்டு சென்றுள்ளது.

இந்த பின்னணியில்தான் டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் நடந்த வருமானவரி சோதனைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு அரசியல் நோக்கமுடைய நடவடிக்கையாக பார்க்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment