ஏமன் நாட்டில் உலகம் கண்டிராத பெரும்பஞ்சம் ஏற்படும்: ஐ.நா. சபை எச்சரிக்கை

432 0

ஏமன் நாட்டுக்கு செல்கிற அனைத்து பாதைகளையும் திறக்காவிட்டால், அந்த நாடு உலகம் இதுவரை கண்டிராத பஞ்சத்தை சந்திக்க வேண்டியது வரும் என்று ஐ.நா. சபை எச்சரிக்கை செய்துள்ளது.

ஏமனில் அதிபர் மன்சூர் ஹாடி ஆதரவு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே ஆதரவு படைகள் களம் இறங்கி உள்ளன. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படைகள் சண்டையிட்டு வருகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன் சவுதியை பழிவாங்கும் விதமாக அந்த நாட்டின் தலைநகர் ரியாத்தில் உள்ள விமான நிலையத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை வீச்சு நடத்தினர். இதையடுத்து ஏமனுக்கு செல்கிற வான், தரை, கடல் பாதைகளை சவுதி கூட்டணி படைகள் அடைத்து விட்டன.

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதங்கள் அனுப்புவதை தடுப்பதற்காகவே ஏமனுக்கு செல்கிற வான், தரை, கடல் பாதைகளை அடைத்துள்ளதாக சவுதி கூறுகிறது. ஆனால் ஹவுதி போராளிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்ய வில்லை என்று ஈரான் மறுக்கிறது.

இந்த பிரச்சினையால் ஏமன் நாட்டுக்கு நிவாரணப் பொருட்கள் எதுவும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஏமனுக்கு செல்கிற வழிகளை அடைத்திருப்பதை சவுதி திறந்து விட வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக ஐ.நா. மனித நேய விவகாரங்கள் துறை துணைத் தலைமை செயலாளர் மார்க் லோஹாக் கூறும்போது, “ஏமன் நாட்டுக்கு செல்கிற அனைத்து பாதைகளையும் திறக்காவிட்டால், அந்த நாடு உலகம் இதுவரை கண்டிராத பஞ்சத்தை சந்திக்க வேண்டியது வரும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் கூறி உள்ளேன். இதனால் பல லட்சம் மக்கள் பாதிப்பு அடைவார்கள்” என்று குறிப்பிட்டார்.

ஏமனில் தற்போது 9 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பஞ்சத்தின் விளிம்பு நிலையில் உள்ளதாக ஐ.நா. கூறுகிறது.

Leave a comment