இந்தியாவில் மத சகிப்புத்தன்மையை அதிகரிக்கவும், மத அடிப்படையிலான வன்முறைகளைக் குறைக்கவும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு சுமார் 5 லட்சம் டாலர் (சுமார் ரூ.3.2 கோடி) பரிசளிக்கவிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்தியாவில் மத சகிப்புத்தன்மையை அதிகரிக்கவும், மத அடிப்படையிலான வன்முறைகளைக் குறைக்கவும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு சுமார் 5 லட்சம் டாலர் (சுமார் ரூ.3.2 கோடி) பரிசளிக்கவிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்தியாவில் மதச் சுதந்திரத்தை அதிகரிப்பதற்கான சிறந்த செயல்திட்டங்களைக் கூறும் தொண்டு நிறுவனங்களுக்கு பரிசுத் தொகைகளை அளிக்க அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மத அடிப்படையில் நிகழும் வன்முறைகளையும், பாரபட்ச நடவடிக்கைகளையும் குறைப்பதற்கான சிறந்த யோசனைகளை அளிக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு, அந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக சுமார் 5 லட்சம் டாலர் (சுமார் ரூ.3.2 கோடி) பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஜனநாயக, மனித உரிமை மற்றும் தொழிலாளர் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:-
இந்தியாவில் பொதுமக்களின் சமூகப் பாதுகாப்பை அதிகரிப்பது, மத வன்முறைகளையும், பாரபட்சங்களையும் குறைப்பது ஆகிய நோக்கங்களுக்காக இந்தப் பரிசுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான ஊக்கத் தொகையாக, அரசு வழங்கும் தொகை பயன்படுத்தப்படும். அமெரிக்க அரசின் வெளிநாடுகளுக்கான நிவாரண நிதியிலிருந்து அந்தப் பரிசுத் தொகை வழங்கப்படும். ஊக்கத் தொகையை வழங்கினாலும், அந்தத் தொகையைக் கொண்டு எந்தெந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற விவரத்தை நாங்கள் வெளியிட மாட்டோம். இந்த பரிசுப் போட்டியில் பங்கேற்றவர்களில் மிகச் சிறந்த செயல்திட்டங்களைக் கூறியவர்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வியாழக்கிழமை கூறுகையில், “இந்தியாவில் மத சகிப்புத் தன்மையை மேம்படுத்த அமெரிக்கா அறிவித்துள்ளதாகக் கூறப்படும் பரிசுத் திட்டம் குறித்து மேலும் விவரங்களைக் கோரியுள்ளோம். இந்தியாவில் எந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றாலும், அது இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உள்பட்டதாக இருக்க வேண்டும்” என்றார்.