43 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தா-வங்கதேசம் இடையே பயணிகள் ரெயில் சேவை

287 0

43 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தா- வங்கதேசம் இடையே மீண்டும் ரெயில் சேவை போக்குவரத்து தொடங்கியது.

தற்போதைய வங்கதேசம் பாகிஸ்தானுடன் இணைந்து கிழக்கு பாகிஸ்தானாக இருந்த போது கொல்கத்தா- குல்னா இடையே பயணிகள் மற்றும் சரக்கு ரெயில் போக்குவரத்து இருந்தது.

இதற்கிடையே வங்காளதேசம் சுதந்திரத்துக்காக இந்தியா- பாகிஸ்தான் போர் நடைபெற்ற போது இங்கு ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது இங்கு மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்க முடிவு செய்யப்பட்டது.

அது குறித்து கடந்த ஏப்ரல் 11-ந்தேதி இந்தியா வந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் நரேந்திரமோடியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதை தொடர்ந்து 43 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தா- குல்னா இடையே மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் ஷேக்ஹசீனா, மேற்குவங்க முதல்-மந்திரி மம்தாபானர்ஜி ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.

டாக்கா சிட்டகாங் பாதையில் மேக்னா மற்றும் டிடாஸ் ஆறுகள் இடையே புதிதாக கட்டப்பட்டுள்ள 2 ரெயில்வே பாலங்களையும் திறந்து வைத்தனர்.

மீண்டும் தொடங்கப்பட்டுள்ள கொல்கத்தா- குல்னா ரெயில் போக்குவரத்து 172 கி.மீட்டர் தூரமாகும். அதில் ‘குளுகுளு’ வசதியுடைய ரெயில் இயக்கப்படுகிறது. அதில் 456 இருக்கைகள் உள்ளன.

முன்னதாக நடந்த தொடக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி இந்த ரெயில்வே போக்குவரத்தின் மூலம் இந்தியா-வங்காள தேசம் இடையேயான உறவு வலுப்படும் என்றார்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பேசும் போது இன்று இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் மிகப் பெரிய நாள் என குறிப்பிட்டார்.

Leave a comment