2000 ரூபாய் நோட்டுக்கள் பதுக்கல் : அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக்கோரி சேகர் ரெட்டி மனு

308 0

கட்டுக்கட்டாக புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வைத்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தொழிலதிபர் சேகர் ரெட்டி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த டிசம்பர் மாதம் வருமான வரி சோதனை நடைபெற்றபோது சுமார் ரூ.34 கோடி அளவிற்கு புதிய 2000 நோட்டுகள், ரூ.147 கோடிக்கு பழைய நோட்டுகள் மற்றும் 178 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சேகர் ரெட்டி உள்ளிட்டோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும், புதிய 2000 ரூபாய் நோட்டுகளை முறைகேடாக பெற்று பதுக்கியது தொடர்பாக சேகர் ரெட்டி மீதும் அவரது கூட்டாளிகள் மீதும் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் தங்கள் மீது அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி சேகர் ரெட்டி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், சேகர் ரெட்டியின் மனுவிற்கு 2 வாரத்தில் பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தது.

Leave a comment