யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் கடந்த வருடம் 1700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருடத்தில் 4700 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
புதிதாக மலேரியா நுளம்புகளின் பெருக்கமும் அதிகரித்துள்ளதுடன் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தொடர்பாக நேற்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த தகவல்களை வௌியிட்டார்.
பருவமழை ஆரம்பித்திருக்கும் நிலையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.
மேலும், மலேரியா நுளம்பு பெருக்கம் பல இடங்களில் அவதானிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் மன்னார் மாவட்டத்தில் அவதானிக்கப்பட்ட இந்த மலேரியா நுளம்பு தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் பல இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த மலேரியா நுளம்புகள் கிணறு, தண்ணீர் தொட்டிகள், பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவான இடங்களில் அதிகளவில் பெருகி வருகின்றது.
இந்தநிலையில் நுளம்பு பெருகும் சாத்தியங்கள் உள்ள பொதுமக்களின் கிணறுகளில் சுகாதார திணைக்களத்தின் ஊடாக மீன் குஞ்சுகள் விடப்படுகின்றன. மக்களின் பாவனையில் இல்லாத கிணறுகளுக்கு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றது.
எனவே, இந்த விடயத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாக உள்ளது.உதாரணமாக மலேரியா நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்கான மீன் குஞ்சுகளை சுலபமாக பெற முடியாதுள்ளது
அந்த மீன் குஞ்சுகள் உள்ளவர்கள் மீன்களை தந்து உதவலாம். அதேபோல் நுளம்பு பெருகும் இடங்களை அழித்து நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் மக்கள் உதவிகளை வழங்கவேண்டும் என பணி ப்பாளர் மேலும் கேட்டுள்ளார்.