சித்திரவதை செய்து இளைஞர் கொலை சுன்னாகம் பொலிஸார் 5 பேருர் மீது கொலை வழக்கு (முழுமையான விபரங்கள்)

513 0

FotorCreated-184சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து இளைஞர் ஒருவர் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 8 பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்படுபவர்களுக்கு எதிராக உடனடியாகவே 5 பொலிஸாருக்கு எதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் கொலை வழக்கும், 8 பொலிஸாருக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றத்தில் சித்திரவதை குற்றச்சாட்டு வழக்குத் தாக்கல் செய்யுமாறும் சட்டமா அதிபர் திணைக்களம் மேலும் பணித்துள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி திருட்டு குற்றச்சாட்டில் சுன்னாகம் பொலிஸாரினால் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் சில நாட்களின் பின்னர் கிளிநொச்சிப் பகுதியில் இருந்த குளத்திற்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இருப்பினும் அது தற்கொலை என்று கூறப்பட்டு அது தொடர்பான விசாரணைகள் மழுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் உயிரிளந்த நபருடன் சேர்த்து திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நவர்களுக்க எதிரான விசாரணைகள் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த மாதம் இவ்விசாரணை மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சந்தேக நபர்களின் ஒருவர் தன்னுடன் கைது செய்யப்பட்ட நபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக வாக்குமூலத்தினை பதிவு செய்திருந்தார்.
இவ்வாக்குமூலத்தில் அக் காலப்பகுதியில் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுதிபதிகாரியாக இருந்த சிந்திக்க பண்டார என்பவருடைய தலமையில், தமிழ் பொலிஸார் உட்பட 8 பேர் இணைந்து இக் கொலையில் தொடர்புபட்டிருந்தனர் என்றும் தகவல்களை வழங்கியிருந்தார்.
குறித்த வாக்குமூலப் பதிவினைத் தொடர்ந்து நீதவான் ஏ.யூட்சன் இக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 8 பொலிஸாரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு கடுமையான உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அத்துடன் சாட்சியங்களுக்கான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டால் அது தொடர்பில் பாரதூரமான நடவடிக்கைகள் ஏடுக்கப்படும் என்றும் நீதுவான் எச்சரிக்கை செய்திருந்தார். இக் கட்டளை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் தெரியப்படுத்துமாறும் நீதவான் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த வழக்கு நேற்று மல்லாகம் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது நீதிமன்றக் கட்டளையின் பிரகாரம் இக் கொலையுடன் தொடர்புடையதாக கூறப்பட்ட எவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவில்லை. இதற்கான காரணங்களை தெளிவுபடுத்துவதற்காக யாழ்.மாவட்டப் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பதிலாக பிரதான பொலிஸ் பரிசோதகர் மன்றில் தோண்றியிருந்தார். அவருடன் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் இருவரும் மன்றில் தோன்றியிருந்தனர்.
மன்றில் தோண்றிய பொலிஸ் பரிசோதகர் இவ்வழக்குத் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை தொடர்பில் மன்றில் பிரஸ்தாபங்களை மேற்கொண்டிருந்தார்.
குறிப்பாக இச் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்படி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இருந்து சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இக் கொலை தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் தொடர்பான நடவடிக்கை மேற்கொள்வதற்காக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன்படி சில அறிவுறுத்தல்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படிக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட 8 பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் உடனடியாக கைது செய்யும் நடவடிக்கையினை குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கைது செய்யப்படுபவர்களில் பெயர் குறிப்பிடப்பட்ட சுன்னாகம் பொலிஸ் நிலையத்தினைச் சேர்ந்த 5 பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டில் தண்டணைக் கோவை சட்டத்தின் கீழ் கிளிநொச்சி நீதவான் நீதுpமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
மேலும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் 8 பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றத்தில் சித்தரவதை தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத்தாக்கல் செய்யுமாறும் குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளருக்கு பணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் அவர்கள் மேற்கொள்வதற்கு பணிக்கப்பட்டுள்ளது என்று கூறி அது தொடர்பான ஆவனத்தினையும் மன்றில் சமர்ப்பித்திருந்தார்.
இது தொடர்பான ஆராய்வுகளை மேற்கொண்ட நீதவான் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரைக்கும் இவ்வழக்கினை ஒத்திவைக்குமாறு பணிப்புரை விடுத்தார்.