தற்போதைய அரசாங்கமானது தனது அரச கொள்கையில் பிள்ளைகளின் கல்விக்கே அதிக முன்னுரிமை அளித்துள்ளதுடன் கடந்த வருடங்களைப் போன்றே இவ்வருட வரவுசெலவு திட்டத்திலும் கல்விக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளதென ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று (09) முற்பகல் மொரட்டுவ பிரின்சஸ் ஒஃப் வேல்ஸ் வித்தியாலயத்தின் வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் அதிகளவிலான கல்விமான்களையும் புத்திஜீவிகளையும் உருவாக்குவதே நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியமானதாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, கல்வி நடவடிக்கைகளில் எவ்வித குறைபாடுகளும் ஏற்படாதவாறு அனைத்து வளங்களையும் பெற்றுக்கொடுத்தல் அவசியமாகும் என்றும் இதன்போது வலியுறுத்தினார்.