2018 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
பிற்பகல் 3 மணியளவில் அமைச்சர் பாதீடு தொடர்பான உரையை நாடாளுமன்றத்தில் ஆற்றவுள்ளார்.
நிதி அமைச்சராக மங்கள சமரவீர பொறுப்பேற்றதன் பின்னர், அவர் முன் வைக்கும் முதலாவது பாதீடு இதுவாகும்.
அத்துடன் சுதந்திர இலங்கையின் 71வது பாதீடாகவும், தற்போதைய கூட்டரசாங்கத்தின் 3வது பாதீடாவும் இது அமையவுள்ளது.
பாதீடு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதற்கு முன்னர் அதன் யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்ளும் வகையில் சிறப்பு கூட்டம் ஒன்று, ஜனாதிபதி தலைமையில் சற்று முன்னர் இடம்பெற்றது.
இதன்போது பாதீட்டுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியது.
நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் 9ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, அடுத்த ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் படி, பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கல் ஆகிய துறைகளுக்காக 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
முன்கூட்டிய ஒதுக்கீட்டின்படி அடுத்த ஆண்டுக்காக எதிர்பார்க்கப்படும் மொத்த செலவீனம் மூவாயிரத்து 982 பில்லியன் ரூபா எனவும், வருமானம் இரண்டாயிரத்து 175 பில்லியன் ரூபா எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெறும்.
16ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்படும்.
அத்துடன் பாதீட்டின் இறுதி வாசிப்பு மீதான விவாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் மாதம் 9ஆம் திகதி வரையில் இடம்பெற்று, இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.