பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பெனிக்கோ அகினோ மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யப்பட்டிருப்பதாக விசாரணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பெனிக்கோ அகினோ. இவர் அங்கு 2010-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தார்.
இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம், தெற்கு மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த மத பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த போலீஸ் படைக்கு உத்தரவிட்டார். அப்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த ஒரு போலீஸ் அதிகாரி தலைமையில் ஒரு படையை தெற்கு மாகாணத்துக்கு அனுப்பி பயங்கரவாதிகளுடன் சண்டையிடவைத்தார். இந்த மோதலில் போலீசார் 44 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இது நாடு முழுவதிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிபரின் அலட்சியபோக்கே இதற்கு காரணம் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டின் ஊழல் எதிர்ப்பு அமைப்பான ‘ஆம்புட்ஸ்மேன்’ விசாரணை குழு, விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், நேற்று இந்த விசாரணை குழு முன்னாள் அதிபர் பெனிக்கோ அகினோ மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. அதிகாரத்தை கைப்பற்றுதல், ஊழல் புரிதல் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக விசாரணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.