ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் வவுனியா கோயில்குளத்தில் நேற்று (08.11.2017) புதன்கிழமை முற்பகல் 11மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் 2.00 மணிவரையில் நடைபெற்றது. இதில் நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல், அரசியலமைப்பு சம்பந்தமான விவகாரங்கள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தற்போது இருக்கக்கூடிய பிரச்சினைகள் என்பன தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், அரசியலமைப்பு தொடர்பிலான இப்போதைய நிலைமைகளையும், இடைக்கால அறிக்கையயும் அதற்கு இருக்கின்ற எதிர்ப்புக்களையும் பற்றி விளக்கிக் கூறினார். அத்துடன் வரக்கூடிய அரசியலமைப்பு வரைபு தமிழ் மக்களுடைய அபிலாசைகளளை பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்குமென்று நம்பவில்லை, இருந்தாலும் இறுதி அறிக்கை வரும்வரை பொறுமை காக்க வேண்டும், இந்த விடயத்தில் நாங்களாகவே உடைத்துக் கொண்டு செல்வதாக இருந்துவிடக் கூடாது என்றும் தெரிவித்தார்.
ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் நிலைப்பாடுகள் பற்றி கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டபோது பதிலளித்த தலைவர் சித்தார்த்தன் அவர்கள், அது ஒரு சுயாதீனமான கட்சி, அந்தக் கட்சி சம்பந்தமாக விரும்பிய முடிவினை எடுப்பது அவர்களுடைய விருப்பம். இருந்தாலும் கூட்டமைப்பில் இருந்து ஒரு கட்சி விலகுவதென்பது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கோ தமிழ் மக்களுக்கோ நல்லதல்ல. ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள், அவர்களுடன் பேசி ஒரு நல்ல முடிவினை எடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்று அவரைக் கேட்டுக் கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.
அத்துடன் உள்ளுராட்சி தேர்தலிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டதோடு, தொகுதி பங்கீடுகள், ஆசனப்பங்கீடுகள், தவிசாளர் நியமனங்கள் என்பன தொடர்பில் மூன்று கட்சிகளும் கூடி ஆராய்ந்து ஒரு முடிவினை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.