ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்று பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உழைப்பவனின் வியர்வை காயும் முன் ஊதியம் வழங்குவது தான் அறம் ஆகும். ஆனால், தமிழகம் உள்ளிட்ட 20 மாநிலங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்தவர்களுக்கு கடந்த இரு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் 69.21 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 86.77 லட்சம் பேர் இத்திட்டத்தின் பயனாளிகளாக உள்ளனர். அவர்களுக்கு கடந்த 10 வாரங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
இதற்குக் காரணம் சம்பந்தப்பட்ட துறைகளின் அலட்சியம் தான்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.48,000 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியது. இப்போது அக்டோபர் மாத முதல் வாரம் வரை இத்திட்டத்திற்காக ரூ.41,760 கோடி, அதாவது 87 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது.
இப்போது நிலுவையில் உள்ள தொகையும், அக்டோபர் 20-ந் தேதிக்குப் பிறகு செய்யப்பட்ட பணிகளுக்கான ஊதியமும் வழங்கப்பட்டால் மீதமுள்ள நிதியும் தீர்ந்து விடும். நடப்பு நிதியாண்டு முடிவடைய இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில் அதுவரை வேலை வழங்காமல் இருக்க முடியாது.
அதுமட்டுமின்றி அனைத்துக் குடும்பங்களுக்கும் சராசரியாக 50 சதவீதம் வேலை கூட இன்னும் வழங்கப்படவில்லை. எனவே, பயனாளிகளுக்கு போதுமான வேலை வழங்க வசதியாக இத்திட்டத்திற்கு ரூ.10,000 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.