மன்னார்குடி-தஞ்சையில் தினகரன், திவாகரன் வீடுகளில் ஒரே நேரத்தில் வருமானவரி துறையினர் சோதனை

372 0

சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

மன்னார்குடி, தஞ்சை ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மன்னை நகரில் டி.டி.வி.தினகரனின் வீடு உள்ளது.

இங்கு இன்று காலை 7 மணியளவில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் போது வீட்டில் இருந்த வேலையாட்கள் மற்றும் ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

மேலும் வெளி ஆட்கள் யாரும் வீட்டுக்குள் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. வீட்டில் ஒவ்வொரு அறையிலும் சென்று சோதனை செய்தனர்.

தினகரனின் வீட்டுக்குள் வருமான வரித்துறையினர் சோதனை நடந்ததால் வீட்டுக்கு வெளியே 10-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

மேலும் தினகரன் ஆதரவாளர்கள் சிலர் வீட்டு அருகே திரண்டனர். அவர்களை போலீசார் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றி அப்புறப்படுத்தினர்.

மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் உள்ள திவாகரன் வீடு முன்பு போலீசார் குவிக்கப்பட்டிருந்த காட்சி.

இதேபோல் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் உள்ள சசிகலாவின் தம்பி திவாகரன் வீட்டிலும் வருமான வரித்துறையினரின் சோதனை நடந்தது.

காலை முதல் நடந்த சோதனையில் அதிகாரிகள் குழுக்களாக சென்று சோதனையிட்டனர்.

இதேபோல் தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள சசிகலாவின் உறவினரான டாக்டர் வெங்கடேஷ் வீட்டிலும் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது வீட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

மன்னார்குடி அன்னவாசல் தெருவில் உள்ள தினகரன் அணி ஆதரவாளரும், அ.தி.மு.க. அம்மா அணியின் திருவாரூர் மாவட்ட செயலாளருமான எஸ்.காமராஜ் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

மன்னார்குடி அன்னவாசல் தெருவில் உள்ள தினகரன் அணி ஆதரவாளரான மாவட்ட செயலாளர் காமராஜ் வீடு.

தினகரன் ஆதரவாளர்களில் திருவாரூர் மாவட்டத்தில் முக்கியமானவராக காமராஜ் இருந்து வந்தார். இதனால் வருமான வரித்துறையினர் இவரது வீட்டையும் சோதனை நடத்தினர்.

மன்னார்குடி நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ராசுப் பிள்ளையின் வீட்டிலும் சோதனை நடந்தது.

திருவாரூர் அருகே கீழ திருப்பாலங்குடியில் தினகரனின் உதவியாளர் விநாயகத்தின் வீடு உள்ளது.

இங்கும் இன்று காலை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இதேபோல் தஞ்சை வடக்கு மாவட்ட வக்கீல் அணி செயலாளர் வேலு கார்த்திகேயன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடந்தது.

மன்னார்குடி, தஞ்சை ஆகிய இடங்களில் இன்று காலை 7 மணி முதல் தொடங்கிய சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று பிற்பகல் வரை சோதனை நடைபெறும் என தெரிகிறது.

மேலும் வருமான வரித்துறையினரின் சோதனை முடிந்த பிறகே முக்கிய ஆவணங்கள் எதுவும் சிக்கியதா? என்ற விவரம் தெரிய வரும்.

இதற்கிடையே தினகரன், திவாகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரது வீடுகளில் வருமான வரித் துறையினரின் சோதனை தினகரன் ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது இரட்டை இலை சின்னம் குறித்து தேர்தல் கமி‌ஷன் எடப்பாடி தலைமையிலான அணியினரிடமும், தினகரன் அணியினரிடமும் விசாரணை நடத்தி முடித்து விட்டது. இதில் யாருக்கு இரட்டை இலை சின்னம் என்ற தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

இந்த நிலையில் தான் சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment