தெருநாய்களைக் கொல்லும் கேரளா அரசின் முடிவுக்கு மேனகா காந்தி கடும் எதிர்ப்பு

363 0

201608261629253320_keralas-decision-to-kill-dangerous-dogs-unlawful-maneka_SECVPFதெருநாய்களை விஷ ஊசி போட்டுக் கொல்லும் கேரள அரசின் முடிவுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.கேரளாவில் தெரு நாய்கள் அட்டகாசம் அதிகளவில் உள்ளது. திருவனந்தபுரம் தொடுபுழா, காசர்கோடு, வயநாடு, கொச்சி போன்ற இடங்களில் தெருக்களில் நாய்கள் சர்வசாதாரணமாக சுற்றித்திரிகிறது.
மேலும் இந்த நாய்கள் பொதுமக்களை கடித்து குதறும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் நாய் கடிக்கு சிகிச்சை பெற ஆஸ்பத்திரிக்கு படை எடுக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

வீடுகளில் நாய்களை வளர்ப்போர் அந்த நாய்கள் குட்டிகள் போடும்போது பெண் குட்டிகளை தெருக்களில் போட்டு விடுகிறார்கள். இவை வளர்ந்து பெருகி தற்போது பெரும் தலைவலியாக மாறி உள்ளது.

மீன் மார்க்கெட்டுகள், கடற்கரை பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக மக்களை மிரட்டும் வகையில் சுற்றித்திரிகின்றன. நாய் கடிக்கு குழந்தைகள் உள்பட பலர் பலியாகி உள்ளனர்.

சமீபத்தில் திருவனந்தபுரம் அருகே சிறையின் கீழ் புல்லுவிளையை சேர்ந்த சிலுவையம்மாள் என்ற மூதாட்டி கடற்கரைக்கு சென்ற போது தெரு நாய்கள் அவரை சூழ்ந்துகொண்டு கடித்து குதறியதில் அவர் உயிர் இழந்தார். இது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனால் தெருநாய்கள் அட்டகாசத்தை ஒடுக்க வேண்டும். தெருக்களில் சுற்றித்திரியும் வெறி நாய்களை கொல்ல வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் தலைமையில் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நாய் தொல்லையை கட்டுப்படுத்த அவற்றிற்கு இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வது. வெறி நாய்களை வி‌ஷ ஊசி போட்டு கொல்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய பினராய் விஜயன் உத்தரவிட்டார். இதுபற்றி அவர் கூறும்போது “வெறி நாய்களை கொல்ல சட்டத்தில் இடம் உள்ளது” என்றார்.

இதேபோல திருவனந்தபுரம் மாநகராட்சி சார்பிலும் வெறி நாய்களை கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆந்திராவில் இருந்து நரிக்குறவர்களை வரவழைத்து வெறி நாய்களை பிடித்து கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெருநாய்களை விஷஊசி போட்டு கொல்லும்படி முதல் மந்திரி பினராய் விஜயன் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மேனகா காந்தி ‘ கேரள அரசின் இந்த முடிவு சட்டவிரோதமானது மற்றும் இயற்கைக்கு முரணானது. தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய மத்திய அரசால் வழங்கப்பட்ட பணம் என்னவானது? அந்தப் பணம் எங்கே சென்றது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில்கூட முன்னர் ஐந்து லட்சம் தெருநாய்கள் சுற்றித் திரிந்தன. ஆனால், முறையாக நாய்களை பிடித்து, கருத்தடை ஆபரேஷன் செய்தபிறகு அந்த எண்ணிக்கை வெகு சீக்கிரத்தில் 70 ஆயிரமாக குறைந்துப் போனது.

தெருநாய்களைக் கொல்வதைவிட அவைகளுக்கு கருத்தடை செய்வதே சிறந்த வழிமுறை. நீங்கள் கொல்வதை நிறுத்தாத வரையில் அவை கடிப்பதை நிறுத்தாது.

இதற்கான நல்ல தீர்வு என்னவென்றால் நீங்கள் தெருநாய்களுக்கு கருத்தடை செய்துவிட்டால் அவை சந்தோஷமாக இருக்கும். மேலும், தடுப்பூசி போடுவதன் மூலம் மக்களைக் கடிக்காமல் தன்மையாகவும் நடந்து கொள்ளும்’ என்றும் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.