பொது போராட்டங்கள் பற்றிய சிறந்த பாடத்தை ஒக்டோபர் புரட்சி கற்றுக்கொடுத்துள்ளது – மைத்ரிபால சிறிசேன

272 0

பொது போராட்டங்கள் பற்றிய சிறந்த பாடத்தை ஒக்டோபர் புரட்சி கற்றுக்கொடுத்துள்ளதென ஜனாதிபதி தெரிவித்தார்.

ஒக்டோபர் புரட்சியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு இலங்கை கொமியுனிஸ்ட் கட்சியினால் நேற்று (07) பிற்பகல் தாமரைத் தடாகக் கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரச ஆட்சிக்கு எதிராக 1917 ஆம் அண்டு லெனின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஒக்டோபர் புரட்சியின் வெற்றியானது, சோவியத் ஒன்றியத்திற்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த மானிடர்களும் பெற்றுக்கொண்ட வரலாற்று ரீதியான வெற்றியாகவே கருதப்படுகிறது. இன்றும் மக்கள் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான புரட்சிகளை மேற்கொண்டபோதிலும் அதற்கான சிறந்த தலைமைத்துவம் குறைவாகவே காணப்படுகின்றதெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ரஷ்யா மற்றும் இலங்கைக்கிடையே காணப்படும் இருதரப்பு உறவுகள் தற்போது பலமடைந்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, 44 ஆண்டுகளுக்குப் பின்னர் ரஷ்யாவுக்கான அரச முறை விஜயம் மேற்கொள்ளுமாறு இலங்கை அரச தலைவருக்கு கிடைத்த முதலாவது சந்தர்ப்பத்தை நினைவுகூரும் வகையில் தான் மேற்கொண்ட ரஷ்ய விஜயத்தை நினைவுகூர்ந்ததுடன், அதன் பெறுபேறாகவே தற்போது இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகள் மேலும் விரிவடைந்துள்ளதுடன் பலமடைந்தும் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

கொம்யுனிஸ்ட் கட்சியினால் உருவாக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த புத்திஜீவிகளின் கடிதங்கள் அடங்கிய “ஒக்டோபர் புரட்சியோடு முன்னோக்கி” எனும் நூல் கொம்யுனிஸ்ட் கட்சியின் கல்விப் பிரிவின் செயலாளர் அகா ஜெயசேனவினால் ஜனாதிபதியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.

சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலரும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர், ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவர் உள்ளிட்ட அதிகாரிகளும், இலங்கை கொம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டியு குணசேகர உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களும், புத்தி ஜீவிகள் மற்றும் அதிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a comment