சமூக அமைதியை கெடுப்பதாக கமல் மீது சிவசேனா புகார்

291 0

சமூக அமைதியை கெடுப்பதாக கமல் மீது சிவசேனா மாநில தலைவர் ஜி.ராதா கிருஷ்ணன் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனியார் டி.வி. ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்துக்களை பற்றி விமர்சனம் செய்ததாக இந்து மக்கள் கட்சி சார்பில் செங்கல்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சிவசேனா மாநில தலைவர் ஜி.ராதாகிருஷ்ணன் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நடிகர் கமல்ஹாசன் கொடுத்த பேட்டியில் இந்து தீவிரவாதம் நாட்டில் உள்ளதாக பேசியதால் இந்துக்கள் வருத்தமும், ஆத்திரமும் அடைந்துள்ளனர்.

வலது சாரி இயக்கங்கள் வன்முறையில் ஈடுபடுவதாகவும் மதக் கலவரத்தை கையில் எடுப்பதாகவும் அவர் பேசியுள்ளார். இதனால் சமூக நல்லிணக்கத்திற்கு பெரும் குந்தகம் ஏற்பட்டுள்ளது.

அமைதியாக வாழும் இந்துக்களை வன்முறையாளர்கள் என்று கமல் குற்றம் சாட்டியுள்ளார். பிற மதத்தினரையும், இந்து தேசிய சிந்தனைக்கு மாற்று கருத்து கொண்டவர்களையும் தூண்டும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது.

கமல் அரசியல் சுய லாபத்திற்காக சமூக அமைதியை கெடுத்துள்ளார். எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment