தமது கோரிக்கைகளை வலியுறுத்தி அநுராதப்புர சிறைச்சாலையில் உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விசாரணையை வவுனியாவிற்கு மாற்றுவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று மீண்டும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, இந்த கோரிக்கையை நீதியமைச்சர் தலதா அத்துகொரலவிடம் முன்வைத்தார்.
சந்தேகத்துக்குரியவர்களின் வழக்கு தொடர்பில் பிரதான சாட்சிகள் இருவர் பாதுகாப்பு கருதி விடுத்த கோரிக்கைக்கு இணங்கவே குறித்த நீதி விசாரணை அநுராதப்புரத்திற்கு சட்டமா அதிபரினால் மாற்றப்பட்டதாக நீதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது கேள்வி எழுப்பிய டக்ளஸ் தேவானந்தா, நாட்டில் இன்று பாதுகாப்பான சூழ்நிலை நிலவுகின்றது.
இந்தநிலையில் குறிப்பிட்ட இரண்டு பிரதான சாட்சிகளும் பாதுகாப்புடன் வவுனியாவுக்கு சென்று தமது சாட்சியங்களை வழங்க முடியும் தானே? என்று டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நீதியமமைச்சர் தலதா அத்துகொரல, சம்பந்தப்பட்ட தரப்பு அநுராதப்புர மேல் நீதிமன்றத்திற்கு கோரிக்கையை முன்வைத்தால் அதனை அநுராதப்புரம் மேல்நீதிமன்றம் பரிசீலித்து வழக்கை வவுனியாவிற்கு மாற்ற முடியுமா என்பதை தீர்மானிக்கும் என குறிப்பிட்டார்.
இதேவேளை, இளைஞர்களின் அமைதியின்மை நாட்டுக்கு நல்லதல்ல.
தெற்கை சாந்தப்படுத்த வடக்கில் உள்ளவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என்ற கருத்துக்களையும் டக்ளஸ் தேவானந்தா தமது தமது உரையின் போது முன்வைத்தார்.