நாட்டின் பல பிரதேசங்களின் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகாமையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் இன்றும் காத்திருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளை விநியோகிக்குமாறு எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கவில்லை என கனிய எண்ணெய் வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
வாகனங்களுக்கு மாத்திரம் பெற்றோலை விநியோகிக்குமாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அமைச்சினால் விசேட சுற்று நிரூபம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையல் , குறித்த அறிவித்தல் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
போத்தல்கள், தகர மற்றும் பிளாஸ்டிக் பேணிகள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு பெற்றோலை கொள்வனவு செய்ய மக்கள் முயற்சிக்கின்றனர்.
இதற்கு தடை விதிக்கும் வகையில் இந்த சுற்றுநிரூபம் இன்று வௌியிடப்பட்டிருந்தது.
அதேநேரம் பெற்றோலை அதிக விலையில் விற்பனை செய்கின்றவர்களை இனம்காண விசேட பரிசோதனைகள் இடம்பெறுவதாகவும் கனியவள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.
உந்துருளி ஓட்டுநர்களும் முச்சக்கரவண்டி சாரதிகளும் இவ்வாறு நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தங்களுடைய, வாகனங்கள் இடைநடுவே செயலிழந்து போயுள்ளதன் காரணமாக, அவர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாடளாவிய ரீதியாக ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாடுடன், பலர் அதிகூடிய விலைக்கு விற்பனை செய்வதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகாமையில் சிலர் பெற்றோல் லீற்றர் ஒன்றை 150 முதல் 180 ரூபாய்களுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்வதாக குறிப்பிட்டனர்.
எவ்வாறாயினும், அதிகூடிய விலைக்கு பெற்றோலை விற்பனை செய்பவர்களை இனம்காண விசேட கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதாக கனிய எண்ணெய் வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக குத்தகை அடிப்படையில் வாகனங்களை செலுத்துபவர்கள் கட்டணங்களை அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
பெற்றோல் கைவசம் இருப்பதாக அரச அதிகாரிகள் கூறுகின்றபோதிலும், இன்னும் உரிய வகையில் பெற்றோல் கிடைக்கப்பெறவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
சில எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள், பெற்றோலை தம்வசம் வைத்துக்கொண்டு, அதனை விற்பனை செய்யாதிருப்பதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை, வட மத்திய மாகாண சபையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் தள்ளு வண்டியில் இன்று சபைக்கு சென்றுள்ளனர்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோல் விநியோகம் தொடர்பான பிரச்சினைக்கு உடன் தீர்வு வழங்ககுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் நோக்கில் அவர்கள் இவ்வாறு செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எரிபொருள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண மூன்று அமைச்சர்கள் கொண்ட குழுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, சரத் அமுனுகம மற்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இதேவேளை, தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய, இந்தியாவிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய அவதானம் செலுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.