தமிழர் பிரதேசங்களிலிருந்து யுத்த நேரத்தில் வெளியேறிய சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மீளக் குடியேறுவதை தமிழர் தரப்பு ஒருபோதும் எதிர்க்காது எனத் தெரிவித்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியேற்றுவதாகக் கூறி புதிதாக சிங்களக் குடியேற்றத்திட்டத்தினை உருவாக்குவதை அனுமதிக்கமுடியாது எனத் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்துக்கான மீள்குடியேற்ற செயலணி, சிங்கள, முஸ்லீம் மக்களின் குடியேற்றத்தை மாத்திரமே நலனாகக்கொண்டு அமைக்கப்பட்டதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களை மீளக்குடியேற்றும் நடவடிக்கைக்கு தமிழர் தரப்பால் கடும் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்படுவதாக அமைச்சர் ரிசாட் பதியூதீன் சிறிலங்கா நாடாளுமன்றில் நேற்றைய தினம் பாரதூரமான குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார்.
றிசாட் பதியுதீனின் குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்த வடக்கு மகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், வடக்கிலிருந்து வெளியேறிய முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்திற்கு வடக்கு மாகாணசபை ஒருபோதும் எதிர்ப்புத் தெரிவிக்காது எனவும் புதிதாக சிங்கள, முஸ்லிம் குடியேற்றங்களை அமைப்பதை ஒருபோதும் அனுமதிக்காது எனவும் தெரிவித்தார்.
இதற்கு இனவாத சாயம் பூசுவதை வடக்கு மாசாணசபை ஒருபோதும் அனுமதிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.