சிறீலங்கா இராணுவத்தினர் அடுத்த மாதம் நடாத்தவுள்ள நீர்க்காகம் போர்ப்பயிற்சியில் வெளிநாட்டுக் கடற்படையினர் 49பேர் கலந்துகொள்ளவுள்ளனர் என சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்தார்.
நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், சிறீலங்கா இராணுவத்தினரால் ஒவ்வொரு வருடமும் நீர்க்காகம் போர்ப்பயிற்சி நடைபெற்று வருகின்றது.
இப்பயிற்சியானது இந்த வருடம் செப்ரெம்பர் 3ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதிவரை கொக்கிளாய் கடற்பரப்பில் நடைபெறவுள்ளது.
இதில் சிறிலங்காவின் 368 கடற்படையினர், 506 விமானப்படையினர், 2500 இராணுவத்தினர் என 3,458 படையினர் பங்கேற்கின்றனர்.
இவர்களுடன் பங்களாதேஸ், சீனா, இந்தியா, ஜப்பான், மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 49 வெளிநாட்டுப் படையினர் பங்கேற்பாளர்களாகவும், பார்வையாளர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
படையினரின் சிறப்பு நடவடிக்கை ஆற்றல்களை வெளிப்படுத்தவே இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.