தமிழக சட்டசபையில் இன்று மக்கள் பிரச்சினைகள் பற்றி பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.தமிழக சட்டசபையில் மூன்றாவது நாளாக இன்றும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, எதிர்க்கட்சியான தி.மு.க. உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பினர். விஷன் 2025 திட்டம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்தார். இதற்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.
இதற்கிடையே, மக்கள் பிரச்சனைகள் குறித்து பேச தி.மு.க. உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், “தேர்தலின்போது 570 கோடி ரூபாய் பிடிபட்டது குறித்து கேட்டோம். கரூரில் அன்புநாதன் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்க வேண்டும். திருப்பூர் அருகே கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்பதுபோன்ற பல பிரச்சினைகளை பேசினோம்
ஆனால் தி.மு.க. உறுப்பினர்கள் பேசும்போது அமைச்சர்கள் குறுக்கிடுகின்றனர். பணம் பறிமுதல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. மக்கள் பிரச்சினைகள் குறித்து பேரவையில் பேச முற்பட்டால் தடுக்கிறார்கள். அதனால் வெளிநடப்பு செய்தோம்” என்றார்.