சென்னை : கந்துவட்டிக் கொடுமையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது குறித்து முதல்வரை விமர்சித்து கார்ட்டூன் வரைந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக பிரச்னைகள் குறித்து சாடும் வகையில் கேலிச் சித்திரங்களாகவும் கருத்தாழமிக்க சித்திரங்களாகவும் படைத்து வருபவர் கார்ட்டூனிஸ்ட் பாலா. குமுதம் இதழில் சுமார் 10 ஆண்டுகளாக பணியாற்றிய இவர் தற்போது லைன்ஸ் மீடியா என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் கார்ட்டூன்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறார்.
கடந்த அக்டோபர் 24ம் தேதி பாலா, நெல்லையில் நடைபெற்ற கந்துவட்டி கொடுமைக்கு பலியான குடும்பத்தினர் குறித்து அரசை சாடும் வகையிலான கார்ட்டூன் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். முதல்வர், ஆட்சியர், அதிகாரிகளை கடுமையாக சாடும் வகையில் அந்த
கார்ட்டூன் அமைந்திருந்தது. தம்மை அவதூறாக சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்டதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் இன்று காலையில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இருந்து பாலா கைது செய்து அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
TN 72 G 1100 என்கிற திருநெல்வேலி பதிவு வாகனத்தில் பாலா கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன. கார்ட்டூனிஸ்ட் பாலா சமூக வலைதளங்களிலும், களத்திலும் பிரச்னைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் சிறந்த கருத்தாழமிக்க செயற்பாட்டாளர்.