அரசு வழங்கும் காணியை விற்பனைசெய்தால் அரசுடமையாக்கப்படும் -வெருகல் பிரதேச செயலாளர்

359 0

imageகாணியற்றவர்களுக்கு வழங்கப்படும் காணிகளை விற்பனைசெய்ய முற்பட்டால் அந்த காணிகள் அரசுடமையாக்கப்படும் என வெருகல் பிரதேச செயலாளர் மா.தயாபரன் தெரிவித்தார்.திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் காணியற்றவர்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச வெருகல் செயலாளர் மா.தயாபரன் தலைமையில் இன்று வியாழக்கிழமை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அனுர தர்மதாச பிரதம அதிதியாகவும், உதவி மாகாண காணி ஆணையாளர் ஜீ.ரவிராஜன் சிறப்பு அதிதியாகவும் , உதவி திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநிதன்,காணி உத்தியோகத்தர் ப,பரணிதரன் சிறப்பு அதிதிகளாக வும் கலந்து கொண்டனர். இதுவரை காலமும் இருப்பதற்கு காணி இல்லாத நிலையில் வாழ்ந்து வந்த 260 குடும்பங்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.

இங்கு கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர்,

அரசாங்கம் வழங்கும் பெறுமதியான இக் காணிகளை உரிய முறையில் பயன்படுத்துவதுடன் அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் பாதுகாக்க வேண்டும். உங்கள் பிள்ளைகள் அல்லது இரத்த உறவுகட்காக மட்டுமே இதன் உரிமை மாற்றப்பட முடியும். ஆனாலும் பலர் இவற்றை ஈடு வைப்பதற்கும் ,விற்பதற்கும் தயாராக இருப்பீர்கள். அவ்வாறான மாற்றங்கள் இடம்பெற்றால் இக் காணிகள் மீண்டும் அரச உடைமையாக மாறிவிடும் என்பதை மறந்துவிடக்கூடாது. காணிகளில் கிடைப்பனவானது இப்பிரதேசத்தில் மிக அரிதாக இருப்பதனால் ,இவற்றை பாதுகாப்பாக பேணுவது உங்கள் பொறுப்பாகும். புனர்வாழ்வு அமைச்சின் மூலம் கிடைக்கப் பெறுகின்ற பல உதவித்திட்டங்கள் காணி உரிமை இன்மையால் கை நழுவிப் போயும் பலர் இங்கு இருக்கிறீர்கள். இனிமேல் அவ்வாறான சூழ்நிலையொன்று உங்களுக்கு ஏற்படாது. இருக்கும் காணிக்கை உரிமை இல்லாமையானது அகதி முகாம்களில் வாழ்வதற்கு ஒப்பானதே. இன்று இந்த அவலங்கட்கு ஒரு விடிவு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த காணி ஆணையாளர்,

இத்தனை காலமும் அடாத்தாகபிடித்த காணிகளில் வாழ்ந்த உங்களுக்கு இன்று அதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் எந்த சந்தர்ப்பத்திலும் இக்காணிகளை அரச உடைமையாக்கிக் கொள்ள முடியும்,அவ்வாறான நிலை உருவாகாமல் பாதுகாப்பது உங்கள் கைகளிலேயே உள்ளது என்றார்.

இங்கு உரையாற்றிய மாகாண உதவி காணி ஆணையாளர் :-

காணி ஆவணங்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுத்து செயற்பட்ட பிரதேச செயலாளர் மற்றும் காணிக் கிளை உத்தியோகத்தர்கட்கும் எமது பாராட்டுக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இக்காணிகளை தரப்பட்ட நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் காணிகளை விற்பனை செய்ய முற்பட்ட கூடாது என்றார்.

image_9 image_8 image_7 image_6 image_5 image_4 image_3 image_2 image_1