முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் அக்கட்சியின் ஸ்தாபகருமான எம்.எச்.எம். அஷ்ரப் விமான விபத்தில் பலியானமை தொடர்பில் கண்டறிய நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2000 ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி 14 பேர் உயிரிழந்தனர். இவர்களது மரணம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவின. இதனைக் கண்டறிவதற்காகவே அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
நீதிபதி எல்.கே. ஜீ. வீரசேகரவின் தலைமையில் அவ்வாணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அதனை ஒப்படைத்துள்ளது.
இந்த அறிக்கை கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனாதிபதி செயலகத்திலிருந்து தேசிய சுவடிகள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட போது காணாமல் போயுள்ளதாக அதன் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவுத் இந்த வேண்டுகொளை ஜனாதிபதி செயலகத்திடம் விடுத்திருந்தார். இந்த வேண்டுகொளை ஜனாதிபதி செயலகம் மறுத்துள்ளது.
இதனையடுத்து முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவுத் தகவல் அறிந்து கொள்ளும் ஆணைக்குழுவிடம் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது தொடர்பில் தகவல் அறிந்து கொள்வது தொடர்பான ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.