தமிழ் அரசியல் கைதி தப்பியோட்டம் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வேளை சம்பவம்

443 0

anantharjh-238x300அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதி இரவோடு இரவாக தப்பிச் சென்றுள்ளார்.
இராசையா ஆனந்தராசா என்னும் கைதியே இவ்வாறு தப்பிச் சென்றவர் ஆவர். தப்பிச் சென்றவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த கைதி கடந்த 2006 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இருப்பினும் 2012 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இருப்பினும் சில மாதங்களின் பின்னர் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தனது விடுதலையினை வலியுறுத்தி அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி அவர் உடல் நலக்குறைவு காரணமாக சிறைச்சாலை வைத்திய சாலையில் அனுமதிகக்ப்பட்டிருந்ததை பாராளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன்படி அவரை யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றுமாறு சிறைச்சாலைகள் புணர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி அவர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிறைக் காவலர்களின் கண்காணிப்பில் 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்திருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு சிறைச்சாலை காவலர்கள் தூங்கிக் கொண்டிருக்கையில் அவர்களை ஏமாற்றிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இருப்பினும் உடனடியாக யாழ்.போதனா வைத்திய சாலை பொலிஸ் அழைக்கப்பட்டு தேடுதல் நடத்தியிருந்த போதும் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.