அரசியல் கைதிகளுக்காக தொடர்ந்தும் உழைப்போம்!

255 0

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்தி வந்த தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் தங்கள் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவந்திருக்கும் நிலையில், அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்தும் உழைப்போம் என, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமது வழக்குகளை வவுனியா நீதிமன்றத்திலிருந்து அனுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்ற வேண்டாம் எனக் கோரி, தமிழ் அரசியல் கைதிகள் மூவர் கடந்த 40 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

தற்போது அந்தப் போராட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே, சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

தமது வழக்குகளை அனுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றவேண்டாம் எனக் கோரி தமிழ் அரசியல் கைதிகள் மூவர் கடந்த 40 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

இந்தநிலையில் பல்கலைக்கழக மாணவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் அடிப்படையில் போராட்டத்தை கைவிடுங்கள் என அரசியல் கைதிகளிடம் கேட்பது என தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய நாங்களும், பல்கலைக்கழக மாணவர்களும் அனுராதபுரம் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்திருக்கின்றோம்.

இந்நிலையில் அரசாங்கம் ஏமாற்றிவிட்டது என கூறிக்கொண்டு திரிய இயலாது.

ஜனாதிபதி செயலகம் தொடர்ந்தும் எங்களோடு பேசி கொண்டிருக்கின்றது. இதனடிப்படையில் ஆளுநர் என்னை தொடர்பு கொண்டு அரசாங்கம் இந்த பிரச்சினையை மிக விரைவாக தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது. எனவே மிக கூடிய விரைவில் இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என கூறியிருக்கின்றார்.

ஆகவே, அரசாங்கம் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான காலக்கெடு நிறைவடையவில்லை. அரசாங்கம் பிரச்சினையை தீர்ப்பதற்கான சாத்தியங்கள் உள்ளது.

எனவே, அதற்காக சற்று பொறுக்க வேண்டும். அதனையும் மீறி அரசாங்கம் ஒன்றையுமே செய்யவில்லை என்றால் அதற்கு அப்பால் எங்களுடைய போராட்டங்கள் நிச்சயமாக கனதியானதாக இருக்கும்.

அதனை மக்கள் நிச்சயமாக பார்ப்பார்கள். இந்த விடயம் அரசியல் கைதிகளின் உயிர் சம்மந்தப்பட்ட விடயம் அவர்களை சும்மா சாக விட இயலாது என்றார்.

Leave a comment