யாழ்ப்பாணம் – வலி வடக்கு பலாலி பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி அப் பகுதி மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வசாவிளான் சமூக நலன் அமைப்பினர் ஏற்பாடு செய்த இப் போராட்டம் இன்று காலை, வசாவிளான் பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமாகி, பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தின் வாசஸ்தலம் வரை சென்றது.
30 வருடங்களிற்கு மேலாக படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தமது நிலங்களை விடுவித்து தங்கள் அகதி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்கள்.
வலி வடக்கில் படிப்படியாக நிலவிடிவிப்பு இடம்பெற்ற போதும் தற்போது வரை தங்களின் நிலங்கள் விடுவிக்கப்படாதமை, தமக்கு ஏமாற்றமளிப்பதாக தெரிவித்த, மக்கள் ஜனாதிபதி இவ் விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
படைத்தரப்பினர் தமது கோரிக்கைகளை சாதகமாக பரீசிலிக்க வலியுறுத்தி மகஜர் ஒன்றையும் மக்கள் யாழ் மாவட்ட கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராட்சியிடம் கையளித்தனர்
இந்த மகஜர் தொடர்பில் தாம் மேன்மட்ட அதிகாரிகளிடம் கலந்துரையாடி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக யாழ் மாவட்ட கட்டளை தளபதி இதன்போது உறுதியளித்தார்.