யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சுவிஸ்குமார் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மீண்டும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் நேற்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வித்தியா கொலையின் பிரதான குற்றவாளியாக இனங்காணப்பட்ட சுவிஸ்குமார் கைதுசெய்யப்பட்ட வேளை, தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், லலித் ஜெயசிங்க சந்தேகநபரை அரசியல் அழுத்தம் காரணமாகவே தப்பிச் செல்ல அனுமதியளித்ததாக, யாழ்ப்பாணத்தில் வதந்தி பரவியது.
இதற்கமைய, அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடமும் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இந்த விடயம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, பாதுகாப்புப் பிரிவினர் கூறியுள்ளனர்.