நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி பிற்பகல் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
இது நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் முதலாவது வரவு செலவுத் திட்டமும் ஆகும்.
இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்வைக்கப்படும் அடுத்த வருடத்துக்கான மொத்த செலவுகள் 3982 பில்லியன் ரூபா என மதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடத்துக்கான (2018) அரசாங்கத்தின் மொத்தச் செலவுகள் இவ்வருடத்துக்காக (2017) ஒதுக்கப்பட்ட கடந்த வரவு செலவுத் திட்டத்தின் செலவுகளுடன் ஒப்பிடும் போது 355 பில்லியன் ரூபா அதிகமாகும் எனவும் கூறப்படுகின்றது.
இம்முறையும் கடந்த வருடத்தைப் போலவே அதிக நிதி பாதுகாப்புக்கே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
வரவு செலவுத் திட்டம் சபையில் முன்வைக்கப்படவுள்ள 9 ஆம் திகதி முதல் பாராளுமன்ற வளாகத்தைச் சுற்றி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 9 ஆம் திகதி முன்வைக்கப்பட்டதன் பின்னர் மறுநாள் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரையில் ஒரு மாத காலத்துக்கு வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.