மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3ஆம் பிட்டி கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதிக்கு அருகில் இராணுவ முகாம் அமைப்பதற்கான காணியினை மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் வழங்கியுள்ள நிலையில் குறித்த காணி நில அளவீடு செய்யும் நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை இடம் பெற்றுள்ளது.
எனினும் நில அளவை செய்யப்பட்ட குறித்த காணி இராணுவத்திற்கு வழங்க வேண்டாம் எனவும், குறித்த நடவடிக்கையினை உடனடியாக நிறுத்தக்கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று (25) பாதுகாப்பு பிரதி அமைச்சர், மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த 4 வருடங்களுக்கு முன் குறித்த பகுதியில் இராணுவ முகாம் காணப்பட்ட நிலையில் அங்கிருந்து இராணுவம் வெளியேறியுள்ள நிலையில் தற்போது மீண்டும் குறித்த பகுதியில் இராணுவத்திற்கு காணி வழங்க நில அளவை செய்யப்பட்டுள்து.
எனவே குறித்த நடவடிக்கைகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
மக்களின் காணிகளில் உள்ள படை முகாம்களை அகற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் மக்களின் தேவைக்க வழங்கப்பட வேண்டிய காணிகளை புதிய இராணுவ முகாம்களை அமைக்க அனுமதி வழங்க முடியாது என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.