காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடுப்பகுதியளவில் ஜனாதிபதியினால் பெயரிடப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகத்தின் ஏழு பேர் கொண்ட பிரதிநிதிகளை நியமிப்பதற்கு கடந்த மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
மனித உரிமைகள் விவகாரம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம், புலனாய்வு மற்றும் உண்மையைக் கண்டறிதல் உள்ளிட்ட மேலும் சில விடயங்கள் தொடர்பில் அனுபவமிக்கவர்களிடமிருந்து இதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
இந்த நிலையில், இது தொடர்பான விண்ணப்பங்கள் அரசியலமைப்பு பேரவைக்கு தற்போது கிடைத்துவருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதித் திகதி முடிவடைந்ததன் பின்னர், கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களை அரசியலமைப்பு பேரவை ஆராயும்.
இதையடுத்து, பணியகத்தின் பிரதிநிதிகளை நியமிப்பதற்கான பெயர்களை அரசியலமைப்பு பேரவை ஜனாதிபதிக்கு விதப்புரை செய்யும்.
இந்த விதப்புரைகளின்பேரில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் வாரமளவில், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகத்தின் தவிசாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பணியகத்தின் தவிசாளராக நியமிப்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களை, அரசியலமைப்பு பேரவையால் ஜனாதிபதிபதிக்கு விதந்துரைக்க முடியும் என அது தொடர்பான சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விதப்புரை முன்வைக்கப்பட்டு 14 நாட்களுக்குள் பணியகத்தின் தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்களை ஜனாதிபதி பெயரிட வேண்டும்.
எனினும், அந்த காலப்பபகுதிக்குள் ஜனாதிபதினால் குறித்த நியமனங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால், விதந்துரைக்கப்பட்டவர்கள், பணியகத்தின் உறுப்பினர்களாக கருதப்படுதல் வேண்டும்.
தவிசாளராக நியமிக்கப்படுவதற்கான பெயர்களில், முதலாவதாக இருக்கும் பெயருடையவர், பணியகத்தின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளவராக கருத்தப்படுவர் என காணாமல் ஆக்கப்பட்டடோர் தொடர்பான பணியக சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.