“நாம் பொறுமையின் எல்லையைத் தாண்டிவிட்டோம். பல விட்டுக்கொடுப்புகளையும் செய்துள்ளோம். எனவே, இனிமேல் பொறுமைக்கும் விட்டுக்கொடுப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடமளிக்காது. தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வே வேண்டும். இதனை நாம் அடைந்துகொள்ள இலங்கை அரசுக்கு தென்னாபிரிக்க அரசு கடும் அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும்.” என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் ரொபினா மார்க்ஸ், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பு நேற்று நடைபெற்றது.
நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதன்போதே எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
இந்தச் சந்திப்பில் புதிய அரசமைப்பு, இலங்கையின் தற்போதைய அரசியல் முன்னேற்றங்கள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது