இடம்பெயர்ந்தவர்களின் வளர்ச்சி வீதம் அதிகரிப்பு

416 0

thumb_large_thalathaஉலக சனத்தொகை வளர்ச்சியைவிட இடம்பெயர்ந்தவர்களின் வளர்ச்சி வீதம் அதிகரித்து செல்கின்றது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். 

கொழும்பு செயன்முறை நாடுகளின் அமைச்சர்களின் 5ஆவது மாநாடு இன்று கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் ‘சுபீட்சத்துக்காக சர்வதேச வெளிநாட்டு வேலைவாய்ப்பு, இணைந்து செயற்படுவதன் மூலம் பெறுமதியை சேர்த்துக்கொள்ளல்’ எனும் தொனிப்பொருளில் அமைச்சர் தலதா அத்துகோரள தலைமையில் நடைபெற்றது.

இதன் உறுப்புநாடுகளான ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் இந்தியா, நேபாளம், சீனா, பிலிப்பின், தாய்லாந்து, வியட்நாம் இலங்கை, இந்துனேசியா ஆகிய 11 நாடுகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,வெளிநாடுகளில் தொழில் புரியும் தொழிலாளர்களின் எதிர்கால திட்டங்கள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த காலங்களில் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம். அதேபோன்று எதிர்காலத்திலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

மேலும் சர்வதேச ரீதியில் இன்று 244 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். உலக சனத்தொகை வளர்ச்சியைவிட புலம்பெயர்பவர்களின் வளர்ச்சிவீதம் அதிகரித்து செல்வதாக ஐக்கிய நாடுகளின் தரவுகளின் மூலம் அறிய முடிகின்றது. 2000ஆம் ஆண்டு 2.8வீதமாக இருந்த புலம்பெயர்ந்தவர்கள் 2015ஆம் ஆண்டு 3.3ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் புலம்பெயர்ந்தவர்களின் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் ஆசிய நாடுகளிலேயே இருக்கின்றனர். 2000ஆம் ஆண்டுக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சர்வதேச ரீதியில் 26 மில்லியன் பேர் மேலதிகமாக தோற்றுவிக்கப்பட்டுள்ளனர்.

எனவே வெளிநாட்டு வேலைவாய்ப்பில் முற்றுமுழுதான இலாபத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் உறுப்புநாடுகள் கலந்தாலோசனை ஒன்றில் ஈடுபடுதல் மற்றும் ஒப்பந்தம் செய்யப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு சட்டரீதியிலான இணைப்புகளுக்கு அப்பால் மற்றும் உசித்தமான சூழல் ஒன்றை ஏற்படுத்துவதே இந்த கொழும்பு திட்டத்தின் நோக்கமாகும் என்றார்.