சிரியாவுக்குள் இருந்தபடி துருக்கி எல்லையில் அவ்வப்போது வாலாட்டிவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துகட்டும் முதல்முயற்சியாக துருக்கி நாட்டு ராணுவ டாங்கிகள் சிரியாவுக்குள் அத்துமீறி நுழைந்து ஆவேச தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
சிரியா-துருக்கி எல்லைப்பகுதியில் உள்ள ஒரு நகரத்தின் மீது நேற்று முன்தினம் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசி ஐ.எஸ். தீவிரவாதிகள் இருமுறை தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக சிரியாவுக்குள் ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களின்மீது துருக்கி படைகள் 40 முறை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடனுடன் சமீபத்தில் கூட்டாக பேட்டியளித்த துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன், சிரியாவில் முகாமிட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தி அவர்களையும் அங்கே முகாமிட்டுள்ள இதர போராளி குழுக்களையும் விரட்டியடிப்போம் என்று அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, துருக்கி – சிரியா எல்லையோரம் உள்ள சிரியாவுக்கு சொந்தமான ஜராப்லஸ் நகருக்குள் துருக்கி ராணுவத்துக்கு சொந்தமான 9 பீரங்கி டாங்கி வாகனங்கள் நேற்று அதிரடியாக நுழைந்தன. ராணுவத்தினரும், துருக்கியை சேர்ந்த போராளி குழுவினரும் இயந்திர துப்பாக்கிகளுடன் டாங்கி வாகனங்களை பின்தொடர்ந்து சென்றனர்.