புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொறியியல் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.பொறியியல் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை: திருச்சி கோர்ட்டு தீர்ப்பு.
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதி லாசன்ஸ் ரோடு ஆபீசர்ஸ் காலனியை சேர்ந்தவர் அஜய் ரூபன் (வயது 22). தஞ்சை மாவட்டம் வல்லத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.
திருச்சியைச் சேர்ந்தவர்கள் ராஜராஜன், அருமாஸ், சிராஜுதீன், விமல் என்கிற விமல் கார்த்திக், ராம் என்கிற ராம்பிரசாத், சல்மான் என்கிற சல்மான்கான். நண்பர்களான இவர்கள் 6 பேரும் திருச்சி மற்றும் சென்னையில் உள்ள வெவ்வேறு கல்லூரிகளில் படித்து வந்தனர்.
அஜய் ரூபனுக்கும், ராஜராஜன் தரப்பினருக்கும் இடையே பள்ளியில் படித்தபோது சீனியர், ஜூனியர் மாணவர்கள் என்ற பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 31-12-2012 அன்று இரவு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ராஜராஜன் உள்பட 6 பேரும் திருச்சியில் உள்ள ஒரு டீக்கடை முன் நின்றனர். அப்போது அஜய் ரூபன் தனது நண்பர்கள் சிலருடன் அங்கு வந்தார்.
அப்போது தகராறு ஏற்பட்டதில் ராஜராஜன் உள்ளிட்டவர்கள் அஜய் ரூபனை கத்தியால் குத்தினார்கள். படுகாயம் அடைந்த அஜய் ரூபன் உயிருக்கு போராடியதால் அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ராஜராஜன் உள்ளிட்டவர்கள் அங்கும் விடாமல் சென்று தாக்கினார்கள்.
இந்த சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜராஜன் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி அஜய் ரூபன் 7-1-2013 அன்று பரிதாபமாக இறந்தார். எனவே இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் கடந்த 26-3-2013 அன்று திருச்சி முதன்மை செசன்சு கோர்ட்டில் கண்டோன்மெண்ட் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 3 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
நீதிபதி குமரகுரு, ராஜராஜன், அருமாஸ், சிராஜுதீன், விமல் என்கிற விமல் கார்த்திக் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் சிறைத்தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 2 மாதம் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார்.
ராம் என்கிற ராம்பிரசாத், சல்மான் என்கிற சல்மான்கான் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது.