கொஸ்கொடை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
கொஸ்கொடையில் நேற்று முன்தினம் (29) அதிகாலை மூன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.
இதில், தந்தை மற்றும் அவரது தனயன்கள் இருவரும், மற்றொரு 39 வயது நபரும் கொல்லப்பட்டனர். பதினைந்து வயது மாணவர் ஒருவர் காலில் துப்பாக்கிக் காயத்துக்கு ஆளானார்.
இச்சம்பவங்களின் பிரதான சூத்திரதாரி ‘கொஸ்கொடை தாருக’ என்று பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
பாதாள உலகக் கும்பல் ஒன்றின் பிரதானியான தாருக, அத்துருகிரிய பகுதியில் உள்ள வங்கிக் கொள்ளைகளில் சம்பந்தப்பட்டவர்.
அதுமட்டுமன்றி, அண்மையில் சிறைப் பேருந்திலேயே வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மற்றொரு பாதாள உலகக் கோஷ்டி தலைவரான ‘சமயனி’ன் கொலையிலும் தாருகவுக்கு தொடர்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கொஸ்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு, கோஷ்டி மோதலே காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தாருகவின் கையாளான கொஸ்கொட லொக்குவா என்பவர் சில மாதங்களுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு கொஸ்கொட சுஜி என்பவர் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்கள் கொஸ்கொட சுஜியின் உறவினர்கள் என்றும், லொக்குவாவின் கொலைக்குப் பழிவாங்குவதற்காகவே கொஸ்கொட தாருக மேற்படி கொலைகளை அரங்கேற்றியிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தற்போது, கொஸ்கொட தாருகவைத் தேடும் முயற்சியில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.