சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி மற்றும் த.மா.கா.வுடன் இணைந்து போட்டியிட்ட தே.மு.தி.க. ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாமல் போனது. தேர்தலுக்குப்பின்னர் கட்சியின் தலைவர் விஜயகாந்த், நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.இந்நிலையில், தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்த தே.மு.தி.க. மாநில பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன், உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்தார். அதேசமயம், தே.மு.தி.க. தலைமையை ஏற்கும் கட்சியுடன் இணைந்து உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கவும் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
மக்கள் நலக் கூட்டணியுடன் செய்துகொண்டது தேர்தல் உடன்பாடுதான் என்றும், அது முடிந்துவிட்டதாகவும் த.மா.கா. கூறியுள்ளது. தற்போது தே.மு.தி.க.வும் வெளியேறியுள்ளது. இரு கட்சிகளும் தனித்தனி நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும், நட்புறவு பாதிக்காது என்றும், இதனால் மக்கள் நலக் கூட்டணிக்கு பாதிப்பு இல்லை என்றும் திருமாளவன் கூறியுள்ளார்.