அப்துல்கலாம் நினைவிடத்தில் நினைவு மண்டபம் கட்டுவதற்கான சர்வே பணி தொடங்கி உள்ளது.
ராமேசுவரம் அருகே பேய்க்கரும்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடம் உள்ளது. இங்கு ரூ. 60 கோடி மதிப்பில் நினைவு மண்டபம் கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) ஏற்பாட்டின் பேரில் நேற்று கலாம் நினைவிடம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களை சென்னையை சேர்ந்த குழுவினர் சர்வே செய்தனர். இதன் அறிக்கையை டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்துக்கு விரைவில் அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர்.
தற்போது கலாம் நினைவிடம் 1.36 ஏக்கரில் உள்ளது. அதனை சுற்றி அரசு காலி இடம் 4 ஏக்கர் உள்ளது. இது தவிர தனியாரிடம் 3 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்க வருவாய்த்துறையினர் முடிவு செய்துள்ளனர்.