நார்வேயிலிருந்து 8 பேருடன் புறப்பட்டு ஆர்ட்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ரஷ்ய ஹெலிகாப்டரில் பயணித்த ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நார்வேயிலிருந்து கடந்த 26-ம் தேதி புறப்பட்டுச் சென்ற போது திடீரென பழுது ஏற்பட்டு ஸ்வால்பார்ட் பகுதியில் ஆர்ட்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் 5 பணியாளர்கள், 3 பயணிகள் என 8 பேர் பயணித்துள்ளனர்.
நான்கு நாட்களுக்கும் மேலாக கடலில் விழுந்த ஹெலிகாப்டரில் பயணித்தவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டிருந்த நிலையிலும் யாரையும் கண்டுபிடிக்க முடியாததால் அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகியிருக்கலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் சேதமடைந்த பாகங்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் ஒருவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஹெலிகாப்டர் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 130 மீட்டர்கள் தள்ளி அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டாலும், இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் மற்ற 7 பேரும் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.