அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் பின்னணியில் ரஷியாவின் தலையீடு குறித்த விசாரணையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் பின்னணியில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக புகார் எழுந்தது. டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனை தோற்கடிப்பதற்காக சர்ச்சைக்குரிய மின்னஞ்சல்கள் வெளியிட்டும், சமூக ஊடகங்களில் ஊடுருவியும் ரஷியா சதி செய்ததாக கூறப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்காக அமெரிக்க புலனாய்வுத்துறை (எப்.பி.ஐ.) முன்னாள் இயக்குனர் ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு ஒன்றை டிரம்ப் அரசு நியமித்தது. கடந்த மே மாதம் முதல் நடந்து வந்த இந்த சிறப்புக்குழுவின் விசாரணை தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
அதன்படி இந்த விசாரணையில் தற்போது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ‘சீல்’ வைத்து பெடரல் நீதிபதியிடம் வழங்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு குறித்த விவரங்கள் இந்த வாரத்தில் வெளியாகும் என தெரிகிறது. அதைத்தொடர்ந்து உடனடியாக கைது நடவடிக்கைகளும் தொடங்கும்.
இதற்கிடையே தனது பிரசாரத்துக்கும், ரஷியாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு போலியானது எனவும், இது ஒரு சூனிய வேட்டை என்றும் கூறியுள்ள டிரம்ப், ஹிலாரியையும், ஜனநாயக கட்சியினரையும் சாடியுள்ளார். தனக்கு பின்னால் குடியரசு கட்சியினர் அனைவரும் ஒன்றுபட்டு இருப்பதாக தெரிவித்துள்ள அவர், இந்த விவகாரத்தில் ‘ஏதாவது செய்யுங்கள்’ என்றும் தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார்.