பாக். முஸ்லிம் லீக் கட்சியில் நவாஸ் ஷெரீப் மகளுக்கு பதவி வழங்கப்படுமா?

293 0

நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாசுக்கு கட்சியில் பதவி வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக வெளியான தகவலை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி மறுத்து உள்ளனர்.

பாகிஸ்தானில் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப், ‘பனாமா கேட்’ ஊழலில் சிக்கியதால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்த ஊழல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு விசாரணையில் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டால் அவர் தனது ‘பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பி.எம்.எல்-என்)’ கட்சித்தலைவர் பதவியையும் இழக்க நேரிடும் எனத்தெரிகிறது.

இந்த நிலையில் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், சமீபத்தில் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகைக்கு பேட்டியளித்தார். அப்போது பி.எம்.எல்-என். கட்சித்தலைவர் பதவியை தான் ஏற்க வேண்டும் என குடும்பத்தினர் முடிவு செய்திருப்பதாகவும், ஆனால் தான் அதை மறுத்ததாகவும் கூறினார்.

பின்னர் தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ‘பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியை நவாஸ் ஷெரீப்பும், இறைவனும் தலைமை ஏற்று நடத்துவர். கட்சித்தலைவர் பதவிக்கு எனக்கு ஆசை இல்லை. அதில் ஒரு தொண்டராக பணியாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இவ்வாறு பி.எம்.எல்-என். கட்சியின் தலைமை தொடர்பாக பல்வேறு கருத்துகள் வெளியாகி வரும் நிலையில், ‘மரியம் நவாசுக்கு உடனடியாக கட்சியில் எந்த பதவியும் வழங்குவது குறித்தோ, நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக கோர்ட்டு தீர்ப்பு வந்தால் கட்சிக்கு தலைமை தாங்குவது யார்? என்பது குறித்தோ விவாதிக்கவில்லை என பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Leave a comment