சீனாவின் வறட்சி நகரமான ஜிங்ஜியாங்கிற்கு பிரம்மபுத்திரா ஆற்றிலிருந்து தண்ணீரை திருப்பி விட ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்தில் புதிய சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீனாவின் வறட்சி பகுதியான ஜிங்ஜியாங் பகுதியில் உள்ள மக்கள் பயன் பெறும் வகையில் பிரம்மபுத்திராவிலிருந்து புதிய சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி திபெத்திலிருந்து 1000 கி.மீ. தொலைவிற்கு பிரம்மபுத்திரா ஆற்றிலிருந்து நீரானது திருப்பி விடப்பட உள்ளன.
அதற்கான திட்டத்தில் சீன அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆறானது திபெத்தில் உருவாகி இந்தியாவின் வடகிழக்கு பகுதியின் வழியாக கடலில் கலப்பதற்கு முன் வங்காளதேசத்தில் உள்ள மக்களுக்கு பயன்படுகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் பிரம்மபுத்திரா ஆற்றை நம்பி உள்ள பல நாடுகள் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுரங்கப்பாதை அமைக்கப்படும் போது மலைகள் வெட்டப்பட வேண்டும் என்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என சிலர் கருதுகின்றனர். நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும் இந்த திட்டத்திற்கு அதிகப்படியான நிதி தேவைப்படும் நிலை உள்ளது. சராசரியாக 150 பில்லியன் டாலர் செலவாகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2010-ம் ஆண்டு திபெத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் எந்த அணையும் கட்டும் திட்டம் இல்லை என சீனா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.