அரசு ஸ்டேடியங்களை பராமரிப்பு செய்வதற்காக நடைப்பயிற்சி மற்றும் விளையாட வரும் பொது மக்களிடம் கட்டணம் வசூலிக்கலாம் என்று முடிவு எடுத்து நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு திடல்கள் (ஸ்டேடியம்) பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஸ்டேடியங்கள் அமைக்கப்பட்டு பல்வேறு விளையாட்டு திறன்கள் வளர்க்கப்படுகின்றன. சென்னை உள்ளிட்ட சில இடங்களில் உள்விளையாட்டு அரங்குகளும் உள்ளன.
திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து கால்பந்து, பேட்மிட்டன், கூடைப்பந்து விளையாட்டுகள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பெற்று வருகின்றன.
சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிப்பதற்காக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து இருந்தது. ஆனால் தற்போது விளையாட்டு மையங்கள் நிதி ஆதாரமின்றி முறையாக பராமரிக்க முடியாத நிலையில் உள்ளது.
மேலும் விளையாட்டு மைதானத்தினை பொதுமக்களும் சமீபகாலமாக பயன்படுத்தி வருகிறார்கள். நடைப்பயிற்சி, உடல் பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்கள் எவ்வித கட்டணமின்றி காலை, மாலை நேரங்களில் இலவசமாக அரசின் விளையாட்டு மையங்களை இதுவரையில் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நாளை (1-ந்தேதி) முதல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் விளையாட்டு அரங்குகளில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மையத்தை பராமரிப்பதற்காக மாதம் ரூ.250 முதல் ரூ.1100 வரை வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 17 பல்நோக்கு விளையாட்டு கூடங்களும் 25 மினி விளையாட்டு அரங்குகளும் இவற்றின் கீழ் இயங்கி வருகிறது. அதனால் அனைத்து மாவட்ட விளையாட்டு அதிகாரிகளுக்கும் ஆணையம் நாளை முதல் கட்டணம் வசூலிக்க சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
விளையாட்டு வீரர்களை உருவாக்கும் மையமாக திகழும் இந்த பயிற்சி அரங்குகள் கூடுதல் செலவினங்களை எதிர்கொள்ள நிதி ஆதாரம் இல்லாமல் திணறி வருகின்றன. அதனால் ஸ்டேடியங்களை பராமரிப்பு செய்வதற்காக நடைப்பயிற்சி மற்றும் விளையாட வரும் பொது மக்களிடம் கட்டணமாய் வசூலிக்கலாம் என்று முடிவு எடுத்து நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது.
இந்த கட்டணம் மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து என வரையறுக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் உள்ள ஸ்டேடியத்தில் பேட்மிட்டன் விளையாடுவதற்கு மாதம் ரூ.100 கட்டணமும், கிராமங்களில் ரூ.300 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு விளையாட்டு வீரர்கள் மற்றும் நடைப்பயிற்சி சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.