கர்நாடக முதல் மந்திரியுடன் தமிழக விவசாயிகள் இன்று சந்திப்பு

314 0

201608251031309744_Cauvery-water-issue-TN-farmers-today-meet-Karnataka-CM_SECVPFசம்பா சாகுபடிக்காக காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவை தமிழக விவசாயிகள் இன்று சந்தித்து பேசுகின்றனர்.

கர்நாடகாவில் இருந்து காவிரி ஆற்றில் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்படும் தண்ணீரை வைத்தே டெல்டா மாவட்ட விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் செய்து வருகிறார்கள்.

ஆனால் கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு படி அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட தொடர்ந்து மறுத்து வருகிறது.

இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்ததால் அணையின் நீர் மட்டம் தற்போது தான் 70 அடியை எட்டியுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதற்கிடையே பல்வேறு விவசாய சங்கங்களும் கர்நாடகாவில் இருந்து காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு படி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் கர்நாடக அரசு இங்குள்ள அணைகளில் போதுமான தண்ணீர் இல்லை என்றும், தண்ணீர் திறந்து விட முடியாது என்றும் அடிக்கடி கூறி வருகிறது. இதனால் இந்த ஆண்டு சம்பா சாகுபடி நடைபெறுமா? என்ற ஏக்கத்தில் விவசாயிகள் தற்போது உள்ளனர்.

இந்த நிலையில் இயற்கை நீர்வளப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம், உழவர் உழைப்பாளி கட்சி தலைவர் செல்லமுத்து உள்பட 26 சங்கங்களை சேர்ந்தவர்கள் இன்று கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் நீர் பாசன மந்திரியையும் சந்திக்க உள்ளனர்.

முன்னதாக நேற்று சேலத்தில் அவர்கள் ஆலேசானை நடத்தினர். அப்போது நிருபர்களிடம் முன்னாள் எம்.பி. ராமலிங்கம் கூறியதாவது:-

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் குறுவை, தாளடி மற்றும் சம்பா என முப்போகம் விளைந்து வந்தது. ஆனால் தற்போது ஒரு போக சாகுபடி கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனி வரும் சம்பா சாகுபடிக்காவது கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடவேண்டும்.

கர்நாடகாவை தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இதை விவசாயிகள் தரப்பில் வரவேற்கிறோம்.

அதே நேரத்தில் சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடக்கோரி கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவை இன்று சந்திக்க உள்ளோம்.

அப்போது தமிழக விவசாயிகளின் பாதிப்பு குறித்தும், சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீரை திறந்து விடக்கோரியும் அவரிடம் வலியுறுத்துவோம்.

மேலும், இரு மாநில விவசாயிகள் சுமூக உறவு பேணும் வகையில் காவிரி நீரை பகிர்ந்து கொள்ளவும், ஒற்றுமையுடன் செயல்பட உள்ளோம்.

அதுபோல பிரதமர் மோடியை சந்திப்பது குறித்து சென்னையில் வருகிற 27-ந்தேதி நடைபெறும் அனைத்து விவசாயிகளின் கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.