குட்கா விவகாரத்தில் டி.ஜி.பி. அறிக்கை திருப்திகரமாக இல்லை: ஐகோர்ட்டு நீதிபதி கருத்து

271 0

குட்கா விவகாரத்தில் போலீஸ் டி.ஜி.பி.யின் அறிக்கை திருப்திகரமாக இல்லை என்று ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சென்னை ஐகோர்ட்டில் ‘கோடம்பாக்கம் ஸ்டூடியோ 11’ என்ற நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், ‘பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யவும், சட்ட விரோதமாக விற்கப்படும் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைபொருட்களை பறிமுதல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சம்பந்தமாக போலீஸ் டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்ய ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் டி.ஜி.பி. தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதி கூறியதாவது:-

இந்த அறிக்கையில் எந்த விவரமும் இல்லை. அறிக்கையை தாக்கல் செய்தவரின் கையெழுத்துக்கூட இல்லை. அறிக்கை திருப்திகரமாக இல்லை. கண்துடைப்புக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது போன்று தெரிகிறது.

‘தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைபொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?. பள்ளி, கல்லூரி அருகே குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அதுபோன்று விற்பனை செய்பவர்கள் மீது ஏன் கடுமையான நடவடிக்கை எடுப்பதில்லை’ என்று இந்த கோர்ட்டு எழுப்பிய கேள்விகளுக்கு எந்த பதிலும் இல்லை.

குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்தவர்கள் மீது ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த அறிக்கை மூலம் தெரிகிறது. அதை பார்க்கும் போது, எப்.ஐ.ஆர். பதிவு செய்யக்கூட போலீசாருக்கு தெரியவில்லை என்பது தெளிவாகிறது. ஒரு புகாரின் பேரில் என்னென்ன பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட வேண்டும் என்ற தெளிவான சட்ட அறிவு போலீசாருக்கு இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

எப்.ஐ.ஆர். பதிவு செய்ய போலீசாருக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் சட்டம் படித்த சட்ட ஆலோசகர்களை ஏன் நியமிக்கக்கூடாது. அவ்வாறு நியமித்தால் சட்ட சிக்கல்கள் அதிகமாக ஏற்பட வாய்ப்பு இருக்காது. குற்றவாளிகளும் எளிதாக தப்பிக்க முடியாது. அதேபோன்று சப்-இன்ஸ்பெக்டர் தேர்வின்போது சட்டம் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

போலீசார் போதிய எண்ணிக்கையில் இல்லை என்பதால் தான் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படுவதாகவும் காரணம் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், சம்பந்தமே இல்லாமல் போயஸ் தோட்டத்தில் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீஸ் பணி என்பது இக்கட்டான ஒன்று தான் என்பது எல்லோருக்கும் தெரியும்.

சாதாரண போலீஸ்காரர்களும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் வகையில் அவர்களுக்கு பணி ஒதுக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதன்பின்பு, ‘பொது இடங்களில் புகைபிடிக்கக்கூடாது. தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும். குறிப்பாக பள்ளி, கல்லூரி அருகே குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவை கட்டாயம் அமல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக ஒரு வாரத்திற்குள் போலீஸ் டி.ஜி.பி. தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

Leave a comment