ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தேவைப்படும் கூடுதல் நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள பழமை வாய்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு ரூ.39 கோடி ஆதாரத் தொகையாக கட்ட வேண்டியுள்ளது. இந்தத் தொகையை கட்டுவதற்கு அங்குள்ள தமிழர்களான டாக்டர்கள் ஜானகிராமன், திருஞானசம்பந்தம் உள்ளிட்டோர் முயற்சி மேற்கொண்டனர்.
இந்த டாக்டர்கள் இருவரும் ரூ.6½ கோடி பணத்தை ஏற்கனவே கட்டிவிட்டனர். அதன்பின்னர், உலகத் தமிழர்கள் மூலம் ரூ.12½ கோடி பணம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக அரசும் ரூ.10 கோடி வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், இதுவரை, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.29 கோடி வசூலாகியுள்ளது.
இன்னும், தேவைப்படும் ரூ.10 கோடியை அளிக்க அடுத்த ஆண்டு (2018) ஜூன் மாதம் வரை தான் கால அவகாசம் உள்ளது. எனவே, தமிழக அரசியல் கட்சி தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் இதற்கான நிதியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
இதற்கிடையே, தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
நேற்று அவர் தனது டுவிட்டர் பதிவில், “ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்துள்ள நிலையில், மேலும் தேவைப்படும் நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.